ரஷ்யா புதிய முயற்சியாக சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரஷ்யா ஹாலிவுட் படம் ஒன்று விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு நடிகை உள்ளிட்டோரை கூடிய விரைவில் விண்வெளிக்கு அனுப்பவும் தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திட்டம் குறித்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் திரைப்படமான “மிஷன் இம்பாசிபில்” பட கதாநாயகன் டாம் குரூப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் பழைய சோவியத் கஜகஸ்தானில் உள்ள பைகோனர் காஸ்மோட்ரோமிலிருந்து திரைப்பட இயக்குனர் ஷிபென்கோ (38) மற்றும் நடிகை யூலியா பெரிசில்ட் உள்ளிட்டோர் மிக விரைவில் விண்வெளிக்கு செல்ல தயாராக உள்ளனர். இந்த பயணத்திற்கு மூத்த விண்வெளி வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ்ரோ தலைமை தாங்க உள்ளார். இதையடுத்து 12 நாள் பயணமாக மூவரும் சோயுஸ் எம்எஸ்-19 விண்கலத்தில் பயணம் செல்ல உள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்களது படப்பிடிப்பினை சர்வதேச விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ள உள்ளனர்.
ஆனால் அந்த படத்தின் கதைக்களம், பட்ஜெட் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் அந்த படத்திற்கு “தி சேலஞ்ச்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் “ராஸ்காஸ்மோஸ்” தற்போது அறிவித்துள்ளது. அதேசமயம் அந்த படத்தின் கதை, சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் பெண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் அங்கு விண்வெளி வீரரை ஆபத்திலிருந்து பாதுகாப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் நாளை சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் 17-ஆம் தேதி பூமிக்கு திரும்பி வருவர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுடன் சேர்ந்து கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி மையத்தில் தங்கி பணிபுரிந்து வரும் ஓலெக் நோவிட்ஸ்கி எனும் விண்வெளி வீரரும் பூமிக்குத் திரும்ப உள்ளார். இதற்கிடையே ரஷ்யாவில் விண்வெளி நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு தெரியாமல் இருப்பதற்காகவே இது போன்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய நாட்டு அரசியல் ஆய்வாளர் கான்ஸ்டண்டின் கலாச்சேவ் கூறியுள்ளார்.