ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் மாலியில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. அமைதிப்படை ஊழியர்கள் மாலியின் கிடால் பிராந்தியத்தில் உள்ள டெசாலிட் நகரில் காரில் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய கார் எதிர்பாராதவிதமாக சாலைக்கு அடியில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி வெடித்து சிதறியுள்ளது. அந்தக் கோர சம்பவத்தில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், ஐ.நா. அமைதிப்படை ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையே ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் சர்வதேச சட்டத்தின் கீழ் ஐ.நா. அமைதிப்படை ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் போர்க்குற்றங்களாக அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஐ.நா. அமைதிப்படை ஊழியருக்கு ஆன்டனியோ தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்ததோடு விரைவில் படுகாயமடைந்த மூவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.