பட்டபகலில் மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்குறிச்சி இளம் துருத்திவிளையில் தொழிலாளியான அருள்தாஸ் என்பவர் பிந்து என்ற தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பிந்து பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழி மறித்துள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் பிந்துவின் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார். ஆனாலும் அந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பிந்துவை தாக்கியதோடு அவரிடமிருந்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பிந்துவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து பிந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு மேற்கொண்டு 2 மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.