வாக்களிபதற்கு பணம் வழங்கிய வேட்பாளரிடம் இருந்த 1,33,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வாக்காளர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமிரி ஊராட்சி ஒன்றியம் ஆறாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அ.தி.மு.க-வை சேர்ந்த விநாயகம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் பறிமுதல் செய்த பணத்தை அலுவலர் வெங்கடாசலத்திடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.