மது குடிப்பதை தட்டி கேட்டதால் இறைச்சிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகில் செல்வம் என்பவர் இறைச்சிக் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கு வேதவள்ளி என்ற மனைவியும், அம்பிகா, ராம்குமார் என்ற மகளும்-மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் இறைச்சிக்கடையில் உள்ள மரக்கட்டையில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த செல்வம் தனது கடையில் வைத்து மது குடிக்க கூடாது என அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கும், செல்வத்துக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தில் குடித்துக் கொண்டு இருந்தவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வத்தை சரமாரியாக வெட்டினார்.
இதனை தடுக்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணன் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயமடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மது அருந்திய 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதன்பின் அக்கம்பக்கத்தினர் செல்வத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அரிவாள் வெட்டுபட்டு காயமடைந்த அனந்தகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.