அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் முன்பாக சிலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையிலுள்ள கொழும்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அமைந்துள்ளது. அதன் முன்பாக ஈரான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அகதிகள் சரியான பதில் கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கூறியுள்ளனர். அதிலும் 2018-2019 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அகதிகளாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்களை அண்மையில் தான் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளனர். எனினும் நாங்கள் ஏழு வருடங்களாக எங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து சிக்கி தவித்து வருகிறோம்.
மேலும் நாங்கள் ஒவ்வொரு முறையும் அதிகாரிகளிடம் பேச முற்படும் போதெல்லாம் அவர்கள் உங்கள் கோரிக்கைகளில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று கூறிவிடுகின்றனர். இது தான் அவர்கள் எங்களுக்கு அளிக்கும் சமஉரிமையா? என்று அகதிகளின் போராட்டத்தில் ஒருவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பெண் அகதி ஒருவர் கூறியதில் “என் கணவனை விட்டு பிரிந்து இலங்கையில் நான் சிக்கி தவிக்கிறேன். மேலும் என் மகளின் கல்வியும் ஏழு வருடங்களாக தடைப்பட்டுள்ளது. இந்த ஏழு வருடங்களை நான் எவ்வாறு சரிசெய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.
அதனால் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களது குடும்பங்களுடன் சேர்த்து வைக்க உதவுங்கள். மேலும் அமெரிக்கா அல்லது கனடாவிற்கு செல்ல ஏதாவது வழிவகை செய்யுங்கள். இதன் மூலம் எங்களின் குடும்பத்தாருடன் இணைந்து மீண்டும் ஒரு புது வாழ்க்கையை வாழ வழிபிறக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மற்றொரு அகதி தெரிவித்ததில் “இந்த கொட்டும் மழையில் நாங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் முன்பாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் ஒரு அதிகாரி கூட எங்களுக்கு சரியான பதிலளிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.