பண்டோரா பேப்பரில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானியர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், பண்டோரா பேப்பர் புலனாய்வு அறிக்கை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் “பண்டோரா பேப்பரில் இடம் பெற்றிருக்கும் பாகிஸ்தானியர்களை விசாரணை நடத்த உத்தரவு அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க நாட்டின் வாஷிங்டனில் கடந்த 3 ஆம் தேதி சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டமைப்பு (ICIJ) ‘பண்டோரா பேப்பா்’ என்ற பெயரில் புலனாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் சட்ட விரோதமாக வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நபர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் சவுகத் தரின், நீர்வளத் துறை அமைச்சர் மூனிஸ் இலாஹி மற்றும் உறுப்பினர் பைசல் வாவ்டா உள்ளிட்ட பலரது பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, “வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் போன்ற குற்றம் செய்தவர்களை சமூகத்தின் முன் அம்பலப்படுத்திய பண்டோரா பேப்பர் அறிக்கையை நான் வரவேற்கிறேன். புவியின் பருவநிலை மாற்ற பிரச்னையைப்போல இந்த அநியாயத்தை சர்வதேச நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் பண்டோரா பேப்பரில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். மேலும் தவறு நடந்தது கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.