மைசூரு தசரா திருவிழாவையொட்டி புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புகழ் பெற்ற தசரா திருவிழா வருகிற 7ஆம் தேதி முதல் தொடங்கி 15ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தசரா திருவிழா தொடங்கப்படுகிறது.
தசரா திருவிழா தொடங்குவதை ஒட்டி மைசூர் மாநகர் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. வீதிகள் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எளிமையாக நடந்தது போலவே நடப்பாண்டு தசரா விழா எளிமையாக நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொடக்க விழாவில் 400 பேரும் ஜம்பூ சவாரி ஊர்வலத்தில் 300 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.