சென்னை திருவொற்றியூரில் பள்ளி குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் அதிகமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் காய்ச்சல் சரியாகாமல் போக,
மேற்கொண்ட சோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கும், முற்றிலுமாக அழிப்பதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில் ஐந்தாம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.