நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாய் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து வடகிழக்கில் 16 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இது குறித்த தகவலை பாகிஸ்தான் புவியியல் மையம் வெளியிட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்துள்ளன.
இதனால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து கட்டிட இடிபாடுகளில் 200க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பற்றுவதற்காக மீட்பு குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் சேதம் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது மேலும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.