அமெரிக்க நாட்டில் பணியின் போது உயிரிழந்த சீக்கிய அதிகாரியின் பெயரை தபால் அலுவலகத்திற்கு சூட்டி, கவுரவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் பணிபுரிந்த சந்தீப் சிங் என்பவர் இந்தியாவை சேர்ந்த சீக்கிய காவல் அதிகாரி. இவர் தான் அமெரிக்க காவல்துறை வரலாற்றிலேயே பணியின்போது தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட முதல் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், கடந்த 2019 -ஆம் வருடத்தில் போக்குவரத்து தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஒரு வாகனத்தை நிறுத்திய போது ஏற்பட்ட சண்டையில், துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில், கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில், இவரை கவுரவிப்பதற்காக ஹூஸ்டனில் இருக்கும் 315, அடில்ஸ் ஹோவெல் ரோடு தபால் அலுவலகத்திற்கு இவரின் பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
முன்னாள் அமெரிக்க பிரதமர் ட்ரம்ப், இதற்கான உத்தரவில் அப்போது கையெழுத்திட்டிருக்கிறார். எனவே, அந்த தபால் நிலைய கட்டிடத்திற்கு, கடந்த 5-ஆம் தேதி அன்று “சந்தீப் சிங் தலிவால் தபால் அலுவலக கட்டிடம்” என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த விழாவில், சந்தீப் சிங்கின் தந்தையான பியாரா சிங் தலிவால் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, வன்முறையால் எங்களின் மகன், எங்களிடமிருந்து பிரிந்துவிட்டான். எனினும், ஹூஸ்டன் மக்களது எல்லையற்ற அன்பை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.