கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரட்டியடித்து படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர்
இந்திய கடல் எல்லையருகே மீன்பிடிக்க செல்பவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால் மீனவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2000 மீனவர்கள் 500 க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றனர். இதில் ஒரு குழு நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் கச்சத்தீவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இங்கு மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்று கூறி மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மீனவர்கள் மீது கற்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் மீன் பிடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேறு பகுதிக்கு சென்றனர். மேலும் மீனவர்களை அச்சுறுத்தும்படி இலங்கை கடற்படையினர் கச்சத்தீவில் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாததால் அதிருப்தியுடன் நேற்று கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுயதில், “இலங்கை கடற்படையின் தாக்குதலும் கெடுபிடியும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நாங்கள் தொழில் செய்ய முடியாமல் சிரமப்படுகிறோம். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படையால் 20 க்கும் மேற்பட்ட விசைப்படகின் வலைகளை வெட்டி சேதப்படுத்துகின்றனர். குறிப்பாக அவர்களின் அட்டூழியத்தால் ஒரு படகுக்கு 1.5 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது” என கவலையுடன் தெரிவித்தனர்.