தெலுங்கானா மாநிலத்தில் விதியை மீறி சென்று அமைச்சரின் காருக்கு அபராதம் விதித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சராக இருப்பவர் கே டி ராமராவ். இவர் அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் ஆவார். கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இவர் காரில் செல்லும் பொழுது போக்குவரத்து விதியை மீறி சென்றுள்ளார். காரை ராமராவின் கார் டிரைவர் ஓட்டியுள்ளார். இதை கவனித்த டிராபிக் கான்ஸ்டேபிள் வெங்கடேஷ்வரலு, சப்- இன்ஸ்பெக்டர் இளைய்யா ஆகியோர் அவரது காருக்கு அபராதம் விதித்து அதற்கான செல்லானை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதை பார்த்து வியந்த அமைச்சர் ராமாராவ் அவர்களை தன் வீட்டிற்கு வரவழைத்து அவர்களின் நேர்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி பாராட்டினார். மேலும் இவ்வாறு நேர்மையான அதிகாரிகளுடன் தான் என்றும் நிற்பேன் என அவர் கூறியுள்ளார். இந்த இரண்டு அதிகாரிகளும் அரசியல்வாதிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்து உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.