மலைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் எல்லைக்குமாரபாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஏரி கரையோரம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ராமலிங்கபுரம் மற்றும் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 62 பேர் மரம், செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பணியில் ராமலிங்கபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வேப்பமரத்தில் உள்ள கூட்டிலிருந்து மலைத் தேனீக்கள் கலந்ததை பார்த்து பணியில் இருந்தவர்கள் அடித்துப் பிடித்து ஓடினர்.
இதனையடுத்து மலைத்தேனீக்கள் தொழிலாளிகளை விரட்டி விரட்டி கொட்டியது. அப்போது பழனிச்சாமியால் ஓட முடியாததால் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க அவர் அங்குள்ள தண்ணீர் நிரம்பியிருந்த குட்டைக்குள் குதித்து விட்டார். ஆனாலும் மலைத்தேனீக்கள் பழனிச்சாமியை விடாமல் கொட்டியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு மலைத்தேனீக்கள் கொட்டியதால் பழனாள், கோவிந்தம்மாள், வசந்தி, சாரதா, சுப்பிரமணி, தங்கமுத்து உட்பட 19 பேர் உடலில் வீக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீக்கமடைந்த தொழிலாளிகளை மீட்டு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் தேனீ கொட்டி இறந்த பழனிசாமியின் மனைவியும், 2 மகள்களும் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.