செல்போன் தகராறில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தோப்பூர் பாறையூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக இருந்தார். இவருடைய நண்பர் குமாரும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வசித்து வருகிறார். இந்நிலையில் குமாரின் செல்போனை முருகேசன் பேசுவதற்காக வாங்கியுள்ளார். இதனையடுத்து குமாரிடம், முருகேசன் செல்போனை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கடந்த 24-ஆம் தேதி குமார் முருகேசனிடம் தனது செல்போனை கேட்டுள்ளார்.
அதற்கு முருகேசன் கிண்டல் பேசியதால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த குமார் முருகேசனை கல்லால் தாக்கியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோபி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் குமாரை காவல்துறையினர் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர்.