ஆப்கானில் 4 ஐ.எஸ் பயங்கரவாதிகளை தலீபான்கள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கான் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 முதல் தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலீபான்களுக்கு எதிராக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஐ.எஸ். அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் தலீபான்களை குறிவைத்து பல தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதனால் தலீபான்கள் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தலீபான்கள் உட்பட பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இதனால் ஆப்கான் நாட்டின் தலைநகர் காபூலில் தலீபான்கள் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை ஒன்றை நடத்தினர். இந்த சோதனையின் போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரை தலீபான்கள் கைது செய்தனர்.
மேலும் கைது செய்த ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் ஆயுதங்கள் கைப்பற்ற பட்டுள்ளதாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாகித் கூறினார். இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் ஆப்கானின் ஜலாலாபாத் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த தலீபான்கள் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 தலீபான்கள் உயிரிழந்ததோடு அங்கிருந்த பொதுமக்கள் 3 பேரும் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.