ஆர்யா, பசுபதி இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் காட்சியை வைத்து பல்வேறு மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் மீண்டும் ஆர்யா, பசுபதி இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நெற்றிக்கண் பட இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கும் வெப் தொடரில் ஆர்யா, பசுபதி இணைந்து நடிக்க இருக்கின்றனர். ஷாமிக் தாஸ்குப்தாவின் ‘தி வில்லேஜ்’ கிராபிக்ஸ் நாவலை மையப்படுத்தி உருவாகும் இந்த வெப் தொடர் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது . இந்த வெப் தொடரில் ஆர்யா, பசுபதியுடன் இணைந்து நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகளுக்கான தேர்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.