Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டிலா? – பாஜகவை கலாய்க்கும் சிவசேனா

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்படும் என பாஜக மூத்தத் தலைவர் தெரிவித்ததற்கு, அவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையான 145 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, 56 இடங்களை வைத்துக்கொண்டு பாஜகவிடம் ஆட்சியில் சமபங்கு கோரிவருகிறது.

Image result for மகாராஷ்டிரா தேர்தல்

சிவசேனாவின் கோரிக்கையை பாஜக மறுத்துவரும் நிலையில், நவம்பர் 7ஆம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்காவிட்டால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என பாஜக மூத்த தலைவர் சுதீர் முங்கத்திவார் கூறினார். இதற்கு சிவசேனா தன் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில், குடியரசுத் தலைவர் என்ன உங்கள் பாக்கெட்டில் உள்ளாரா? என சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக, நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு பாஜகதான் காரணம் என சிவ சேனா விமர்சித்திருந்தது. இரு கட்சிகளுக்கிடையே மாற்று கருத்து நிலவிவருவதால், அங்கு ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இதனிடையே நேற்று மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். சிவ சேனாவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பொறுத்திருந்து முடிவு செய்யலாம் என அக்கட்சித் தலைவர்களுக்கு சோனியா காந்தி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி 44 இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைபற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |