நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகம் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கட்டுப்பாட்டில் சென்றது. இதனால் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை அடுத்து பல மாகாணங்களை தலீபான்கள் தங்கள் கைவசப்படுத்தினர். மேலும் தலீபான்கள் உத்தரவின் படி, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அங்கு தங்கியிருந்த அனைத்து அயல்நாட்டு படைகளும் முழுவதுமாக ஆப்கானை விட்டு வெளியேறினர்.
குறிப்பாக ஆகஸ்ட் 15 முதல் 31 ஆம் தேதி வரை ஆப்கானை விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் திரண்டிருந்த காணொளி காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. இதனை தொடர்ந்து காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இருப்பினும் நாட்கள் மெதுவாக நகர தலீபான்கள் புதிய இடைக்கால அரசை அறிவித்தனர். மேலும் அவர்கள் கடுமையான சட்டங்களை அமல்ப்படுத்தி தங்களது உண்மையான முகத்தை காட்டினர். இந்த நிலையில் பல நாட்களாக தலைநகர் காபூலில் மூடப்பட்டிருந்த கடவுச்சீட்டு அலுவலகம் நேற்று திறக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தலீபான்களின் நிர்வாக அடக்குமுறை மற்றும் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து தப்பிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்காக அலுவலகம் முன்பு திரண்டனர். குறிப்பாக பெண்கள் கடவுச்சீட்டு பெறுவதற்காக தலீபான்கள் என்ன விதிமுறைகளை விதித்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.