தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 34,773 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளதால் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நியாய விலை கடையில் நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத நபர்கள் இருக்கின்றனர். அதில் வயதானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடைக்கு நேரில் செல்லாமலே பொருட்களை வாங்க முடியும்.
இதற்கான விண்ணப்பத்தை ரேஷன் கடைகள் அல்லது ஆன்லைன் மூலம் பெற முடியும். இந்த விண்ணப்பம் tnpds.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தில் குடும்ப தலைவரின் பெயர் , குடும்ப அட்டை எண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து நியாய விலைக்கடைக்கு நேரில் எதற்காக வரமுடியாது என்ற காரணத்தையும் நிரப்பி அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும்.
அதனைப்போலவே நியாயவிலை கடைகளுக்கு நேரில் சென்று உங்களுக்கு பதிலாக பொருட்களை வாங்குபவரின் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதன் பிறகு அதனை அவர்கள் சரிபார்த்து அனுமதி வழங்கும் சான்றிதழ் வழங்கிய பிறகு ரேஷன் கடைக்கு நேரில் போகாமல் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.