குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு முதல்வர் மு க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொள்முதல் பணிகள் ஆய்வு கூட்டத்தில் அப்பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் கொள்முதல் பணிகள் குறித்த விவரங்களை டெல்டா மாவட்டங்களுக்கான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆட்சிப்பணி அலுவலர்களுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
மேலும் மழை ஆங்காங்கே பெய்து வருவதால் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரை கொள்முதல் பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யவும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இந்த பணிகளை மேற்பார்வை செய்வதற்காகவும் முதல்வர் முக ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். மேலும் பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.