நாம் தமிழர் கட்சியின் அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என மதிமுகவின் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை கண்டித்து பெரியாரிய கூட்டு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய மதிமுகவின் மல்லை சத்யா, ஒரு சுற்றுச்சூழல் போராளியை தமிழ் தேசிய சிந்தனையாளனை வன்முறை நோக்கத்தோடு கொலைவெறி தாக்குதல் நடத்துவோம் முற்றாக அழித்து ஒழிப்போம் என்று அச்சுறுத்துகின்றன. இந்த அராஜகப் போக்கை துவக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. எனவேதான் ஜெயராமன் அவர்கள் தன்னுடைய கருத்தியலை கூறியிருக்கிறார். அந்த கருத்தியலுக்கு எதிர் கருத்தை சொல்லலாம், அங்கு கருத்து பஞ்சம், கருத்து வறட்சி அங்கே இருக்கிறது.
கோழைகளுடைய கடைசி புகலிடம் தான் வன்முறை என்று சொல்வார்கள். எனவே இன்றைக்கு வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு, அச்சுறுத்துவது, அடிபணிய வைப்பது என்பது தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை நான் அடக்கத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இவர்களுடைய நடவடிக்கைகள் தெள்ள தெளிவாகத் தெரிகிறது. பாஜக எதை சொல்கிறதோ… அதை வழிமொழிகின்ற இடத்தில் தான் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்பது பாஜக முழக்கங்களில் ஒன்று. நாம் தமிழர் முழங்களில் ஒன்று திராவிடம் இல்லாத தமிழ்நாடு. கழகங்கள் இல்லாத தமிழ்நாடு பாஜக, திராவிடம் இல்லாத தமிழ்நாடு நாம் தமிழர் கட்சி. அப்போ இவங்க இரண்டு பேர் யார் ? என்று நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம். எனவே இவர்களுடைய நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இவர்களுடைய முகமூடியை கிழிகின்ற விதத்தில், நாம் களமாடிட வேண்டும். நாம் அதற்காக களத்தை அமைத்திருகிறோம். இந்த களத்தில் நாம் சொல்ல வேண்டிய செய்திகளை தலைவர் பெருமக்கள் அமைத்து தந்து இருக்கிறார்கள். எனவே அண்ணன் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் தனி மனிதர் அல்ல, இந்த மாபெரும் கூட்டத்தில் ஒருவர் என்பதை நாங்கள் மைய படுத்துவதற்காக, பறைசாற்றுவதாக, உலகத்திற்கு ஓங்கி சொல்வதற்காகத்தான் இங்கே பெரியாரிய கூட்டு இயக்கம் ஒன்றிணைந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.