கோவை மாவட்ட காவல்துறையில் குற்றப்பிரிவில் கலையரசி என்பவர் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் முன்னதாக பொருளாதார குற்றப்பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது மோசடி நிதி நிறுவனங்கள் மீது பெறப்பட்ட புகார் மனுக்களின் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதமாக வழக்குப்பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். அதனைப்போலவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாகவும் பொது மக்களுக்கு பாதகமாகவும் நடந்துகொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கோயம்புத்தூர் சரக காவல்துறை துறைத்தலைவர் ஆணையின்படி காவல் ஆய்வாளர் கலையரசி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சைலேந்திரபாபு டிஜிபியாக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து வரும் சூழலில் முன்னாளில் பெண் காவலர் செய்த குற்றச் செயல்களுக்கு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது கோவை போலீசார் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.