இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான சவுரவ் கங்குலி கடந்த 24ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பு குறித்து தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.அவர் கூறியதாவது, “கிட்டதட்ட ஒருமணி நேரம் வரை அந்தச் சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பின்போது பகல் – இரவு டெஸ்ட் போட்டிகளில் ஏன் இந்திய அணி பங்கேற்க கூடாது என நான் கேட்டேன். அதற்கு விராட், நிச்சயம் பங்கேற்போம். அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என மூன்றே விநாடிகளில் பதில் கொடுத்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய கங்குலி, “இந்திய அணி இதற்கு முன்னதாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஏன் பங்கேற்கவில்லை என்பதும் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஏன் பகலிரவு போட்டியாக நடத்தவில்லை என்பது பற்றியும் தெரியவில்லை.ஒவ்வொரு டி20, ஒருநாள் போட்டிக்கும் மைதானத்தில் ரசிகர்கள் அலைமோதுகிறார்கள். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மைதானத்தில் காற்றுதான் வீசுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் முழுவதும் ரசிகர்கள் இருந்ததைப்போல், இந்தியாவிலும் டெஸ்ட் போட்டிகளைப் பிரபலப்படுத்தவேண்டும்” என்றார்.
மேலும் இந்திய – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் – இரவு போட்டியாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.