உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி மளிகை கடையில் திருட முயன்ற ஜாமீனில் வந்த குற்றாவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள ஏளூரில் வசித்து வரும் பெருமாள் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவன் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் கடையை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பெருமாள் அனுமதி செய்ய அனுமதியளித்துள்ளார். இதனைதொடர்ந்து அந்த வாலிபர் கடைக்குள் நுழைந்து சோதனை செய்வதுபோல் நடித்து அங்கிருந்த பீரோவில் பணத்தை திருட முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாள் உடனடியாக அந்த இளைஞனை பிடித்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். மேலும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கடைக்கு வெளியே இருசக்கர வாகனத்தின் நின்ற மற்றொரு நபரையும் மடக்கி பிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தகவலறிந்து சென்ற புதுசத்திரம் காவல்துறையினர் அந்த 2 பேரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி நடித்த இளைஞன் பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது நாமக்கல் மற்றும் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்த நிலையில் அவரோடு இருந்த மற்றொரு நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.