Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20: ஷகிப் இல்லாமல் இந்தியாவுக்கு ஈடுகொடுக்குமா வங்கதேசம்?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளால் டெல்லியில் வசித்துவரும் பொதுமக்கள் முகமூடியுடன் அலைந்து திரிந்துவரும் வேளையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியாவுக்கு பயணம் வருவதற்கு முன்னதாக வங்கதேச வீரர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை என வங்கதேச அணி நிர்வாகத்திடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையெல்லாம் சமாளித்து இந்தியா வந்தால், முதல் போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணி வீரர்கள் செய்த பயிற்சிகளில் அனைவரும் முகமூடியுடன் வலம்வந்தனர்.இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. விராட் கோலி இல்லாமால் ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் தவான், கே.எல்.ராகுல், சாஹல் ஆகியோரைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் இளம் வீரர்களாக இருக்கின்றனர்.

ஷிகர் தவான் - கே.எல்.ராகுல்

அதில் ஷ்ரேயாஸ் ஐயர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு அணியில் இடம் நிச்சயம். அதேபோல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதால் அவரும் அணியில் இருப்பார். வேகப்பந்துவீச்சாளர்களாக கலீல் அஹ்மத், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித், சஞ்சு சாம்சன் அல்லது சிவன் துபே ஆகியோரில் ஒருவர் அணியில் நிச்சயம் இடம்பெறுவர் எனத் தெரிவித்தார். வலைப் பயிற்சிகளில் சஞ்சு சாம்சன் அதிக நேரம் காணப்பட்டதால், அவரே அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடும் வங்கதேசத்தின் ரஹ்மான்

வங்கதேச அணியைப் பொறுத்தவரையில், மஹ்மதுல்லா, சர்க்கார், லிட்டன் தாஸ், முஷ்ஃபிகுர் ரஹீம் என நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அணியில் ஷகிப் இல்லாதது பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முஸ்தாஃபிகுர் ரஹ்மான், ஹொசைன், அஃபிஃப் ஹொசைன் என இளம் வீரர்கள் இந்திய அணிக்கு சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

இதுவரை இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அனைத்து டி20 போட்டிகளிலும் இந்தியா அணியே வெற்றிபெற்றுள்ளது. இன்றையப் போட்டியில் அனுபவ கேப்டன் ஷகிப் இல்லாமல் களமிறங்கும் வங்கதேச அணி இந்த வரலாற்றை மாற்றி எழுதுமா அல்லது இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்பதற்கான விடை இன்று இரவு கிடைத்துவிடும்.

Categories

Tech |