பிரித்தானிய இளவரசி டயானா தனது 18 வயதில் குழந்தையை கவனிக்கும் வேலை செய்தது முதன்முறையாக வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 1980 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபராக விளங்கிய மேரி ராபர்ட்சன் முன்னதாக லண்டனில் வசித்துள்ளார். அந்த சமயம் அவரது குழந்தை பாட்ரிக்கை கவனிக்க 18 வயதான டயானா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த வேலைக்காக டயானா ஒரு மணி நேரத்துக்கு 5 டாலர்களை ஊதியமாக பெற்றுள்ளார். மேலும் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் குழந்தை கவனிக்கும் வேலையும் மற்ற நாட்களில் நர்சரி பள்ளியில் ஆசிரியையாகவும் டயானா வேலை பார்த்துள்ளார்.
குறிப்பாக டயானா பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும் இளவரசர் சார்லசை அவர் காதலிக்கிறார் என்பதும் மேரிக்கு அப்போது தெரியாது என கூறினார். ஒரு நாள் டயானா மேரியிடம், நீங்கள் காலையில் வேலைக்கு செல்லும்போது தெருமுனையில் பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் நிற்பதை பார்த்தீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள் யாருக்காக நிற்கிறார்கள் என்று மேரி கேட்டதற்கு எனக்காக தான் நிற்கிறார்கள் என்று டயானா கூறியுள்ளார்.
இது குறித்து மேரி கூறியதாவது, “உலகம் தெரியாத 18 வயதில் நாணமுள்ள ஒரு இளம்பெண்ணாக வேலைக்கு வந்தார் டயானா. மிகவும் எளிமையாக தரையில் அமர்ந்து என் பிள்ளையை நன்றாக கவனித்து கொள்வார். அப்போதே சக மனிதர்களை கரிசனையுடன் அணைத்து கொள்ள கூடிய பண்பும் இருந்தது. இந்த குணம் அவரிடம் கடைசி வரையில் இருந்தது. பின்னர் டயானா திருமணமாகி அரண்மனைக்கு சென்றார். அவர் இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு தங்களுக்குள் நெருங்கிய நட்பு இருந்தது” என்றும் கூறியுள்ளார்.