சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று இணைய வழி முறையில் திருக்கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகைத் தொகையினை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் பிகே சேகர்பாபு கூறியதாவது,
கோவில் நிலங்களின் வாடகை தொகையை முறையாக வசூல் செய்வதற்கும், ஒளிவுமறைவு இல்லாத வகையில் அமையும் வண்ணம் “கேட்பு வசூல்” நிலுவைத்தொகை கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக திருக்கோவில் நிலங்களின் வாடகைதாரர் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் குத்தகை தொகையை இணையதளம் மூலமாக செலுத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாடகை மற்றும் குத்தகையை செலுத்த கடைசி நாள் 15ஆம் தேதி யாக இருந்த நிலையில் இப்போது 110 நாட்கள் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நியாய வாடகை நிர்ணய குழு என்ற குழு விரைவில் அமைக்கப்படும். மேலும் கணினி வாயிலாக வாடகை குத்தகை செலுத்த முடியாதவர்கள் எப்போதும்போல் திருக்கோவில் அலுவலகத்தில் தொகையினை கணினி மூலம் செலுத்தி சீட்டினை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சொந்தமான அசையாச் சொத்துக்களின் மூலம் பெறப்படும் வருமானத்தினை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இதனையடுத்து வசூல் முறையாக நடக்கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருமானம் ஈட்ட, சொத்துக்களை ஏலத்திற்கு குத்தகைக்கு கொண்டுவந்து நிறுவனங்களுக்கான வருவாயை ஈட்ட முடியும்.
முறையாக பணம் செலுத்தாத நபர்களின் விவரங்களையும் இணைய வழியாக தெரிந்துகொள்ளலாம். மேலும் நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இதன் மூலமாக முதலமைச்சர் அலுவலகம், அறநிலையத்துறை அமைச்சர் அலுவலகம், முதன்மைச் செயலாளர் அலுவலகம், ஆணையர் ஆகியோர் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். மேலும் முறையாக குத்தகை வாடகை செலுத்தாத நபர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.