Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாலிபர்கள் செய்த ரகளை…. தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு ஏற்பட்ட சம்பவம்…. 4 பேர் கைது….!!

போலீஸ்காரரை கத்தியால் குத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காத்திருப்பு கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் கடற்கரை காவல் நிலையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது விடுமுறையில் உள்ள சக்திவேல் தனது சொந்த ஊரான காத்திருப்பு கிராமத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் காத்திருப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் சக்திவேல் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதியில் சில வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சக்திவேல் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அதன்பின் அந்த வாலிபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து சக்திவேல் தான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சக்திவேலை வழிமறித்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக்திவேலின் கை மற்றும் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சக்திவேல் பலத்த காயமடைந்தார்.

இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் சக்திவேலை உடனடியாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த பாகசாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சக்திவேலை கத்தியால் குத்திய திருச்சம்பள்ளி கிராமத்தில் வசிக்கும் அருள், தட்சிணாமூர்த்தி, ரமேஷ், சதீஷ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ராஜேஷை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |