நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது ரஜினி ரசிகரான எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை நெடுஞ்சாலை அருகில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு பகுதிவாரியாக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றம் நடைபெற உள்ளதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அமைச்சர்களை மாற்றம் செய்யக் கூடிய அதிகாரம் முதலமைச்சரிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், ரஜினியை பொருத்தவரையில் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் கொண்டவர். அவருக்கு மத்திய அரசு விருது அளித்துள்ளது. அவரது ரசிகராக இந்நிகழ்வை எண்ணி நான் மகிழ்ச்சி தெரிவிப்பதுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.