தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வகுப்பறைகள், பள்ளி வளாகங்களை தூய்மையாக இருப்பதையும்,போதிய அளவு முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். நீண்ட இடைவேளைக்குப்பின் மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.