மாணவ-மாணவிகள் ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் முதுகலையின் கணித ஆசிரியர் சூசைமரியநாதன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். இந்நிலையில் இவரை மற்றொரு பள்ளிக்கு ஆசிரியராக இடமாற்றம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும் தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் முதுகலை கணித ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என அவர்கள் தலைமை ஆசிரியரிடம் முறையிட்ட போது கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவை நாங்கள் மதிக்க வேண்டும் என கூறியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 50-க்கும் அதிகமானவர்கள் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகனிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, எங்கள் பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் 290 மாணவ-மாணவிகள் படித்து வருகிறோம். இதில் அனைவரும் கிராமத்தில் வசித்து வருவதால் இவரின் மூலமாக கணிதப் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறோம். ஆனால் தற்போது அவரை திடீரென்று வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்துவிட்டதால் கிராமப்புற மாணவர்களின் உயர் படிப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.
எனவே உயர் படிப்பிற்கு கணிதம் முக்கியம் என்பதினால் எங்களின் படிப்பு பாதிப்பு ஏற்படாவண்ணம் மாணவ-மாணவிகளின் நலன் கருதி கணித ஆசிரியை மீண்டும் எங்களின் பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் எனவும், வேறு பள்ளிக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மனுவை பெற்ற அவர் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் கணித ஆசிரியரை மீண்டும் எங்கள் பள்ளியில் பணியில் அமர்த்தவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என கூறி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.