லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது அந்த வழியாக காரில் வந்த உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் ஒரு பத்திரிக்கையாளர் உட்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் விவசாயிகளின் மரணத்திற்கு காரணமான உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் விவசாயிகள் அளித்த புகாரின் பெயரில் உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவருடைய மகனின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன. ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என் வி. ரமணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது, அப்போது லகிம்பூர் கெரி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் விவரம், முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விபரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய ஆளும் பாஜக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வீ.ரமணா நீதிபதிகள் ஹீமா ஹோலி சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரித்தது, அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது, லகிம்பூர் கேரி வன்முறை வழக்கில் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் திருப்திகரமாக இல்லை. பொறுப்பான அரசு மற்றும் போலீசாரை நாங்கள் எதிர்பார்க்கிறோம், மேலும் சிலருக்கு குண்டு காயங்கள் கூட ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் சாதாரண விஷயமாக தெரியவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவும் இல்லை. இந்த விவகாரத்தில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள். இல்லையேல் சட்டம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஐபிசி 302 கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படித்தான் எல்லா வழக்குகளிலும் நடந்து கொள்வீர்களா? இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது. பண்டிகை காலம் முடிந்த பின்னர் வரும் 20-ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.