உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ,உத்தரபிரதேசம் வன்முறை சம்பவத்தில் பிரதமர் ஈவிரக்கமற்றவராக இருக்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்ககூடிய விளையாட்டு வீரர்களுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டால் கூட அதற்காக வருந்தி டுவீட் செய்யக்கூடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது. பிரதமரே ஈவிரக்கமற்றவராக இருக்கிறார். மனிதநேயமற்றவராக இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைக்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்ட, படுகொலையான விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையாக உள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தன்னிச்சையாக எடுத்து நடத்துகிறது. அதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டை வரவேற்று பாராட்டுகிறோம் என்று பேசியுள்ளார்.