நீர் பற்றாக்குறையினால் 500 கோடி மக்கள் அவதிப்படுவார்கள் என்று ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பானது ‘தண்ணீருக்கான 2021ம் ஆண்டு காலநிலை சேவைகள்’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சென்டிமீட்டர் அளவிற்கு மண்ணில் ஈரப்பதம் குறைந்துள்ளதாகவும், உறைபனி உருகுதல், நிலப்பரப்பின் நீர் பற்றாக்குறை, தண்ணீர் சேமிக்கும் அளவு குறைதல் போன்றவை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளன.
அதிலும் காலநிலை வேறுபாட்டால் நீர் தொடர்பாக உருவாகும் பேரிடர்களான பெருவெள்ளம், நீர் பற்றாக்குறை, வறட்சி போன்ற இன்னல்களும் எதிர்காலத்தில் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் நீரை சேமித்தல் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல் ஆகிய இரண்டிலும் உலகம் மிகவும் மோசமாக செயல்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிக ஆபத்துகள் விளையும். தற்போது உலகில் உள்ள நீரில் 0.5% மட்டுமே நன்னீர் உள்ளது. அதிலும் கடந்த சுமார் 2018ஆம் ஆண்டு 360 கோடி பேர் நீர் பற்றாக்குறையினால் அவதிப்பட்டுள்ளனர். இந்த சூழலானது மேலும் நீடித்தால் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் 500 கோடி பேர் நீரின்றி வறட்சியால் அவதிப்படுவர். இதனை தவிர்க்க வேண்டுமெனில் உள்ளடக்கிய நீர் மற்றும் பருவநிலை கொள்கைகளை சரியாக பின்பற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.