புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பெரியார், அண்ணா, கலைஞர் என அனைவரும் இன்றும் நம் உயிரோடு கலந்து உள்ளனர். அவர்கள் நம்மோடு இருக்கும் வரை எந்த கொம்பனாலும் இங்கு வந்து நுழைந்து விட முடியாது. வாரிசு அரசியலை பற்றி சிலர் விமர்சனம் செய்கின்றனர், வாரிசு இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வர முடியும், வாரிசு இல்லாதவர்கள் எப்படி வர முடியும், என்னை பற்றி விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் இப்போது என்ன ஆனார்கள் என்பது நன்றாக தெரியும். நம்மை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மட்டும் தான் குட்கா புகழ் என பட்டம் கிடைத்துள்ளது, மக்கள் நல்வாழ்வுத்துறை என்ற பெயரில் நிர்வாக சீர்கேட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர் முதலாவதாக உள்ளது. ஆர்.கே நகர் தேர்தலின் போது 89 கோடி ரூபாய்க்கான ஆவணம் விஜயபாஸ்கர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அந்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இப்படிபட்ட ஆட்சிதான் தமிழ்நாட்டில் தற்போது நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் அக்கிரமான, அநியாயமான ஆட்சி தற்போது நடற்குவருகிறது. இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை போல் வர இருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என்றார்.முன்னதாக மணமக்களை வாழ்த்தி பேசிய ஸ்டாலின் மகன் பெயரை மாற்றி கூறியதால் மணமடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.