திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் சுஜிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதில் செல்வகுமார் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் செல்வகுமார், சுஜிதா இருவரும் திருமணம் முடிந்தவுடன் சென்னையில் வசித்து வந்தனர். அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக செல்வக்குமாருக்கு சரியாக வேலை இல்லை.
இதனால் திருமணமான ஒரு மாதத்தில் சுஜிதாவை அழைத்துக்கொண்டு செல்வகுமார் மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். இதனையடுத்து வாழப்பாடி புதுப்பாளையத்தில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டில் சுஜாதாவை விட்டுவிட்டு செல்வகுமார் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். அதன்பின் செல்வகுமார் செல்போனில் மட்டும் மனைவியுடன் பேசி வந்துள்ளார். இதனைதொடர்ந்து கடந்த 7 மாதங்களாக செல்வகுமார் தனது மனைவி சுஜிதாவை பார்க்க வரவில்லை என்று தெரிகிறது.
மேலும் செல்வகுமாருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுஜிதா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜிதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான கரணம் குறித்து உதவி கலெக்டர் விஷ்ணுவர்தினி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.