கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததாக கூறி இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து ராஜேந்திரபாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
அதில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரித்து வருகிறது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததற்கு முகாந்திரம் உள்ளதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. மேலும் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.