கேரளாவில் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி தொடங்கிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த நாசர் தூதா என்ற வாலிபர் ஏழை பெண்களின் திருமணத்திற்காக இலவச ஆடை வங்கி ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்காக இந்த வாலிபர் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் பேசி அவர்கள் திருமணத்தின் போது அணிந்த ஆடையை வாங்கி அதனை ஏழை பெண்களின் திருமணத்திற்காக கொடுக்க முடிவு செய்துள்ளார். கேரளா மாநிலம் மாமல்லபுரம் -பாலக்காடு எல்லையில் இதற்காக ஒரு கடையை தேர்வு செய்து இந்த ஆடைகளை இலவசமாக கொடுத்து வருகிறார்.
திருமணம் நிச்சயமான ஏழை பெண்கள் இந்த வங்கிக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான ஆடையை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். அவர்களின் திருமணம் முடிந்தபின்னர் விரும்பினால் அந்த ஆடையை வங்கியில் மீண்டும் கொண்டு வந்து ஒப்படைக்கலாம் இல்லையேல் அவர்களே வைத்துக் கொள்ளலாம். முதலில் இங்கு வர தயங்கிய பெண்கள் இப்போது அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளார். மேலும் இந்தத் திட்டம் பிடித்துப்போன பலர் தங்கள் ஆடைகளைக் கொண்டு வந்து இந்த வங்கிக்கு வழங்கி வருகின்றனர். இதனால் இங்கு இப்போது ஏராளமான ஆடைகள் குவிந்துள்ளன. ஆடைகளை வாங்க வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.