தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் மீது ரயில் மோதிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் காமராஜர் நகரில் அம்பிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக பணிபுரிகிறார். இவரது மகன் ஆகாஷ். இவர் பி.காம் படித்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் உள்ள வெண்ணாறு ரயில்வே தண்டவாளத்தில் காலை கடனை முடித்துவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது மன்னார்குடிக்கு வந்த சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அதன் பின் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து தஞ்சை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தஞ்சை ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.