தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை சேத படுத்தியவர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் 2005 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் மூன்றடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை மீது நேற்று மர்ம நபர்கள் கருப்பு கலர் சாயம் , சாணி பூசி அவமானப்படுத்தினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் பல்வேறு தமிழ் அமைப்புகளும் , தமிழ் தேசிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது , ஜாதி , மதம் , மொழி கடந்து உலகத்திற்கு பொதுமையான ஒரு மனிதனான வள்ளுவனை அவமானப் படுத்துவது என்பது தன் மூஞ்சில தானே சாணியை பூசிக்கொள்ளும் செயல். இதை செய்த சமூக விரோதிகள் உடனடியாக காவல் துறை கைது செய்யவேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் இருக்கிற வள்ளுவர் சிலைகளுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.