சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் திருப்புமுனை அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்ப்பவர் 54 வயது ஏர்லின் பெரோரா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி மிகவும் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விபரம் தெரியவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆசிரியர் ஏர்லின் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த புதுவை கோர்ட் ஏர்லின் பெரேராவை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சிறுமியின் பெற்றோர் மேல்முறையீட்டு மனு ஒன்றை சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் குற்றம்சாட்டப்பட்ட ஏர்லின் பெரோராவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் ஏர்லினை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.