நண்பகளுடன் குளிக்க சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள விடிவெள்ளி பகுதியில் பொக்லைன் ஆப்ரேட்டரான பழனிசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான தனசேகர், விஜயகுமார், செல்வம், சங்கர் ஆகியோருடன் தொப்பூர் அணைக்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களோடு உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த பழனிசாமி அணையின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் நெடுநேரமாகியும் பழனிசாமி கரைக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரைத் தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் பழனிசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
உடனே நண்பர்கள் நால்வரும் தொப்பூர் காவல் நிலையத்திற்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அணையில் மாயமான பழனிசாமியை தேடியுள்ளனர். அதன்பின் ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு பழனிசாமியை சடலமாக மீட்டுள்ளனர். மேலும் சடலமாக மீட்கப்பட்ட பழனிசாமியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.