நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேல கல்லூர் பகுதியில் கொம்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வேம்பு சாமி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வேம்பு சாமி அவருடைய மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்துவதற்காக கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான பணிகளைத் தீவிரமாக செய்து வரும் நிலையில் கடந்த 3-ஆம் தேதி தந்தையின் வீட்டு பீரோவில் வைத்திருந்த வேம்பு சாமியின் 13 பவுன் தங்க நகை திருட்டு போனது.
இதுகுறித்து கொம்பையா சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொம்பையாவின் இளைய மகன் லட்சுமி கண்ணனின் மனைவியான சண்முகப்பிரியா நகைகளை திருடியது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சண்முகப்பிரியாவை கைது செய்ததோடு அவரிடம் இருந்த 13 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்துள்ளனர்.