வாக்குசாவடியை பார்வையிட சென்ற கலெக்டர் பொதுமக்களை இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 3 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது சாலை அகரம் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கலெக்டர் பார்த்துள்ளார். உடனே அங்குள்ள அதிகாரிகளை அழைத்து வாக்காளர்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின் வாக்குப்பதிவு விரைவாக நடைபெறுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்யும்படி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்டமாக 7 ஊராட்சி ஒன்றியங்களில் அமைதியான முறையில் வாக்குபதிவு நடந்தேறியுள்ளது. அதன்பின் இரண்டாம் கட்டமாக 6 ஒன்றியங்களில் 2,800 பதிவிடங்களுக்கு 1,379 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் வாக்கு பதிவு செய்வது சமூக இடைவெளியில் வரிசையில் நின்று சுலபமாக வாக்கினை செலுத்துவதற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமரா, வெப்கேமரா போன்றவை பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலான காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்.