புதிய காற்றழுத்தத்தாழ்வு பகுதியால் 5 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறும் போது , புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியில் உருவாகி உள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு மூன்று தினங்களில் மத்திய கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவித்தார்.
அதே போல தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு தினங்களுக்கு தென் மாவட்டங்களில் வெப்பச் சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் , குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழையாக கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மீனவர்களை எச்சரிக்கை பொறுத்தவரை காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக 4 மற்றும் 5 தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கும் , 6 7 8 தேதிகளில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். மீனவர்களுக்கு 5 நாட்கள் எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.