Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காணாமல் போன தாய்-மகள்…. கிணற்றில் கிடந்த சடலம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

தாய்- மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் அருள் சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தை சேர்ந்த விஜயபிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு சாம் என்ற மகனும், துதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயபிரியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன் விஜயபிரியா தனது மகன் மற்றும் மகளுடன் டி.என். பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தங்கி இருந்தார்.

இதனையடுத்து விஜயபிரியா சாப்பிட்டவுடன் தனது தாயாரிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் அவரது உறவினர்கள் எழுந்தபோது விஜயபிரியா இருந்த அறை கதவு திறந்து கிடந்தது. அங்கு சாம் மட்டும் இருந்தார். ஆனால் விஜயபிரியாவும் அவரது மகள் துதியும் அங்கு இல்லை. இதனால் உறவினர்கள் அவர்களை தேடி பார்த்தபோது டி.என்.பாளையம் ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள கிணற்றில் விஜயபிரியா சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயபிரியாவின் சடலத்தை மீட்டனர்.

இதனைதொடர்ந்து தீயணைப்புதுறை வீரர்கள் துதியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதன்பின் சுமார் 6 மணி நேரம் கழித்து துதியின் சடலத்தையும் தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய்-மகள் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் விஜயபிரியா தனது மகள் துதியை முதலில் கிணற்றில் தள்ளி கொன்று விட்டு, பின் அவரும் குதித்து விட்டார் என்று காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |