நடுரோட்டில் லாரி பழுதானதால் 2 மணிநேர போக்குவரத்து பாதிப்படைந்தது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகளின் வழியாக தினமும் லாரி, பஸ், கார் மற்றும் கனரக வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பாதை தமிழகம்- கர்நாடகம் இடையே முக்கிய சாலையாக அமைந்துள்ளது. மலைப்பாதை வளைவுகள் மிகவும் குறுகியதாக இருப்பதால் அதன் வழியாக அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்படைகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகருக்கு ஈரோட்டிலிருந்து லாரி ஒன்று சென்றுள்ளது.
இதனையடுத்து செல்லும் வழியில் 9-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பிய போது நடுரோட்டில் பழுதாகி நின்றதால் அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்கள் செல்லமுடியாமல் திண்டாடியது. இதனையடுத்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடிகளிலும், கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் ஆசனூர் சோதனை சாவடிகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதன்பின் பண்ணாரிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரேன், பழுதான லாரியை மீட்ட பின்னரே போக்குவரத்து சீரானது. .