Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வாக்குச்சாவடி மையம்” அத்துமீறிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாக்குச்சாவடியில் அதிகாரியுடன் மது போதையில் தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் 24 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஒருசில வாக்குச்சாவடிகளில் மட்டும் சில பிரச்சினைகள் நிலவியது. அதாவது ஓமலூர் ஒன்றியத்தில் 10-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்களிக்கும் வகையில் பெரியேரிப்பட்டி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிக்கு வந்த  பெரும்பாலானோர் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அப்போது அங்கு ஒருவர் பின் ஒருவராகச் சென்று 2 பேர் வாக்களித்தனர். ஆனால் அவர்கள் வாக்களித்து விட்டு அங்கிருந்து செல்லாமல் நின்று கொண்டிருந்தனர்.

இதனையடுத்து அங்கு பணியில் இருந்த ஒரு அதிகாரி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் மது போதையில் இருந்த அவர்கள் அதிகாரியை தரக்குறைவாக பேசியதுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் ரெட்டிபட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளர்களான மணிகண்டன், ஜெகநாதன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அதன்பின் அவர்கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோன்று வீராணம் ஊராட்சிக்குட்பட்ட வீமனூர் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது 100 மீட்டருக்கு நின்று கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பது தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க. தரப்பினர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இருதரப்பைச் சேர்ந்த 2 பேரை போலீஸ் வேனில் ஏற்றினர். அதன்பின் அவர்கள் 2 பேரும் காவல்துறையினரிடம் எழுதிக் கொடுத்த பின் விடுவிக்கப்பட்டனர். மேலும் மேச்சேரியம் பாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

அப்போது வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்குரிய அடையாள ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அதற்கான சீட்டுகளுடன் மட்டும் ஓட்டுப் போட வந்துள்ளார். அதற்கு அ.தி.மு.க சுயேச்சை வேட்பாளர்களுக்கான முகவர்கள் அந்த நபரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என்றும், அவர் இந்த பகுதியை சேர்ந்தவர் கிடையாது என்றும்  தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர் கள்ள ஓட்டுப் போடுவதற்காக வந்துள்ளார் என்றும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அ.தி.மு.க.-தி.மு.க. இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் ஆவணங்கள் இல்லாமல் வாக்களிக்க வந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Categories

Tech |