தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை செய்யும் எண்ணத்தை தடுத்து தன்னம்பிக்கை வளர்ப்பதற்காக ‘ஜெயித்துக்காட்டுவோம்’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம், நடிகர் ஆர்.ஜே. பாலாஜி,அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாணவர்கள் தேர்வுகளுக்கு பயப்படாமல் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியுள்ள 1.10 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு மனநல ஆலோசகர் மற்றும் மருத்துவர்கள் உதவியுடன் தொலைபேசியின் மூலம் கவுன்சில் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நீட் தேர்விற்கு எதிராக பல முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றே தீருவோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.